சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகையால் மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று (17) அறிவித்திருந்தது.
இதன்படி, நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.
தற்போது வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன. எனினும் சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த இரண்டு கப்பல்களின்மூலம் பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு, 5 நாட்களுக்குப் போதுமானதாகும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், பொதுமக்கள் ஒரு கொல்களனில் மாத்திரம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளுமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.