இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருந்த நிலமையைவிடவும் தற்போது மோசமாகி வருகிறது.
இலங்கையில் வாழும் மக்கள் 2022 ஆரம்பத்திலிருந்து மே மாத ஆரம்பம் வரை வாழ்வுக்காக போராடியதை விடவும் மே மாதத்தின் பிற்பகுதியிலும் ஜூன் மாத தொடக்கத்திலும் தங்கள் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள்.
2019 நவம்பர் மாதம் கோட்டா ஜனாதிபதியாகுமுன் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பாக இருந்த இலங்கையின் அன்னிய செலாவனி கையிருப்பு தற்போது ஒரு மில்லியன் அமெரிக்க டொலரும் இல்லாத நிலைக்கு முற்றாக வறண்டு போயுள்ளது.
இந்தியா வழங்கிய கடன் வரியைத் (Credit Line) தவிர, இதுவரை எந்த நாட்டிலிருந்தும் புதிய கடன் வரி கிடைக்கபெறவில்லை. கடைசி நேரத்தில் பக்கத்து நாடு இந்தியா நமக்கு உதவிக்கு வராமல் இருந்திருந்தால், இந்தத் தருணத்தில் தெருவில் மக்கள் போராட்டம் செய்வது எப்படிப்போனாலும் தங்களுடைய வாழ்க்கை போராட்டத்துக்காக கொலை, கொள்ளைகள் செய்யும் நாடாக இலங்கை மாறியிருக்கலாம். ஆனால் அந்த உதவிக்கு இந்தியாவுக்கு என்ன விலை கொடுக்க வேண்டிவருமென இன்னும் யாருக்கும் தெரியாது.
இலங்கைக்கு வந்துள்ள எரிபொருள் கப்பல்களிலிருந்து எரிபொருளை விடுவிப்பதற்கு 75 மில்லியன் டொலர்களை கூட கொடுக்க முடியாமல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இலங்கை அரசாங்கம் திண்டாடுகிறது என்பதனை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் மக்களுக்கான பேச்சும் தெளிவாக புரிய வைக்கிறது.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை.
எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கைக்கு மாதாந்தம் 500 மில்லியன் அமேரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. 2019 ல் 7.5 பில்லியன் அமேரிக்க டொலர் அன்னியச் செலாவணி இருந்தும் தற்போது 500 மில்லியன் டாலர் என்பது இலங்கைக்கு தொலைதூரக் கனவாகவே உள்ளது.
தற்போதைய சூழலில், நாட்டின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்கள் வரை அரசாங்கத்திற்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அந்தப் பணம் எப்படிக் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பணம் பெறுமாயின், பல சிக்கலான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னரே அதனை பெற்றுக்கொள்ளலாம் அதே நேரம் வேறு வழிகளும் இல்லை, அவ்வாறு பெற்றுக்கொள்ளவும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மேலும் மூன்று மாதங்கள் வரை செல்லும். அந்த மூன்று மாதங்கள் வரை குறுகிய காலத்தில் டாலர்களை தேடிக்கொள்வதே தற்போது இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.
புதிய பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடியுள்ளார். ஆனாலும் அதன் விளைவாக குறுகிய காலத்தில் பணம் வருமா அல்லது எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.
கண்மூடித்தனமான பண அச்சடிப்புகளின் விளைவுகள் இருந்தபோதிலும், பணத்தை அச்சிடாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையை இலங்கை எட்டியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இந்தக் கேள்விக்கான பதிலை சில அரசியல் கருத்தொற்றுமை மற்றும் கூட்டு முயற்சி இல்லாமல் காண முடியாத நிலைக்கு மாறியுள்ளோம்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய கேள்விக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமா அல்லது ஏனைய விடயங்களா என்பதுதான் இப்போது பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எதிர்நோக்கும் இக்கட்டான நிலைமயாகும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகாத சூழ்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்வைத்தால், ராஜபக்சக்களுக்கு எதிரான ஊழல்கள் பின்செல்லும் அதே நேரம் போராட்டக்காரர்கள் முன்வைக்கும் விடயங்களையும் ஒருங்கமைப்பு செய்வது எல்லோரினதும் தலையாய கடமையாகும்.
எவ்வாறாயினும், முடிந்தவரை ராஜபக்ஷக்கள் மற்றும் ஏனைய ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பரிமுதல் செய்வதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையைக் கண்டறிய வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் பரிந்துரைக்கிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிக்கட்சித் தலைவருமான கெளரவ சஜித் பிரேமதாச அவர்கள் பாராளுமன்றத்தில் கூறுகின்ற ஒரு விரிவான அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமும் 21வது அரசியலைம்பு சீர்திருத்தத்தில் சுயாதீன கமிஷன்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு சிறந்த அதிகாரிகள் அங்கு நியமிக்கப்பட்டு இதற்கான பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.
எனவே, நாளைமுதல் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், விமர்சன ரீதியாக ஆதரிப்பவர்கள், சுதந்திரமானவர்கள், மனசாட்சிப்படி செயற்படுபவர்கள் என அனைவரும் இதற்காக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் பாராளுமன்றத்துக்கு சரியான பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டியதுடன் ஒரே இலங்கையர்களாக கைகோர்த்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டுமே நாட்டின் இருப்பும், ஸ்தீரத்தன்மையும், அபிவிருத்தியும் முன்னோக்கிச் செல்லும்.
இல்லாவிட்டால் இலங்கை நீண்ட காலத்திற்கு எழ முடியாத அளவுக்கு வீழ்ச்சியடையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
ஹிதாயத் சத்தார்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், SJB கண்டி மாவட்ட அமைப்பாளர்.