நாட்டுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக தாய்லாந்தின் சியாம் நிறுவனத்துடன் எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை அனுமதி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் முதல் எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டுக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு கேள்வி மனுவின் ஊடாக குறித்த தாய்லாந்து நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.
கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதேவேளை ஓமான் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்தது.