பதவியை இராஜினாமா செய்யுமாறு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளை (09) அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், மேலதிக விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நாட்டை ஆட்சி செய்ய உரிய திட்டம் இருந்தால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நாளை (09) அலரிமாளிகைக்கு முன்பாக அழைக்கப்பட்டுள்ளனர்.
‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பிரதமருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.