(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)
கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள ஹெவென்ட்ரா ஹோட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு உள்ள தளபாடங்கள் மற்றும் பொருட்கள் சிலரால் சூறையாடப்பட்டன.
இந்நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் இன ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே பெரியமுல்லை பிரதேசத்தில் பதற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.
டீன் சந்தியில் அமைந்துள்ள மூன்று கடைகள் தாக்கப்பட்டன. அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இரண்டு சைக்கிள்களும் தீ வைத்து மீரிகம வீதியில் வைத்து எரிக்கப்பட்டன.
இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அங்கு பதற்றம் நிலவியது. பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வமத தலைவர்கள் தலையிட்டனர். கத்தோலிக்க மதத் தலைவர்கள் இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அமைதி ஏற்படுவதற்கு முயற்சி செய்தனர்.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் மீரிகமை வீதி மற்றும் பெரியமுல்லை பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். பின்னர் அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது.