Our Feeds


Sunday, May 1, 2022

ShortNews Admin

அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை, தமிழக BJP தலைவர் திடீர் இலங்கை வருகை ஆகியன பல சந்தேகங்களை உண்டாக்குகிறது - SJB கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹிதாயத் சத்தார் அறிக்கை



கொழும்பு உட்பட நாடுபூராகவும் மே தினத்தையொட்டி இன்று பல போராட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாற கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை சாதாரணமாக புறந்தள்ள முடியாது என்றும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட அவதானம் செலுத்தி அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஹிதாயத் சத்தார் வலியுறுத்தியுள்ளார்.


அத்தோடு பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது குழுவினருடன் இலங்கை வந்துள்ளார். மலையக தரப்பினரின் அழைப்பின் பிரகாரம் அவர் வருகை தந்த போதும் அமெரிக்க எச்சரிக்கையும் இந்தியப் பிரதமர் மோடியின் பா.ஜ.க கட்சிப் பிரதிநிதிகள்  வருகையும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இன்னும் ஓரிரு நாட்களில் முஸ்லிம்களின் புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. எனவே பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.


லலித் அத்துலத் முதலி மைதான பேரணியில் 10,000 பேரும் விக்டோரியா பூங்கா பேரணிக்கு 5000 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாதயாத்திரையும் கொழும்பு வரவுள்ளது என இன்றைய மேதின பேரணிகளை பட்டியலிட்டு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருப்பது சாதாரண விடயமல்ல. இது மிகவும் பாரதூரமானது.


இன்றைய தினம் மொட்டு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பேரணிகளை நடாத்தவில்லை என தெரியவருகிறது. எனவே மே தினத்தன்று கலவரத்தை தூண்ட சில விஷம சக்திகள் முயலுகின்றதா? என்ற கேள்வி  எழுகிறது. எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கும் பாதுகாப்பு தரப்பினரே பொறுப்பு கூற வேண்டும்.


எனவே இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரும் உளவு பிரிவினரும் விசேட அவதானம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு தரப்பினர் அலட்சியமாக செயற்பட்டு, கலவர நிலை உருவானால் பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்  என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »