கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் தாக்குதல் நடத்தியவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்து நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும் பொலிஸ் மா அதிபர் அதனை தடுத்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோதலை தடுக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த போதிலும், அலரிமாளிகையில் இருந்து வருபவர்கள் மீது கண்ணீர் புகை அல்லது நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றில் மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன,
“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நாங்கள் காலியில் இருந்து ஒரு குழுவையும் அழைத்து வந்தோம். அந்தக் குழுவினர் அலரி மாளிகைக்கு சென்றனர். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமருக்கு வாழ்த்து செலுத்த விரும்பினர்.
இந்த சந்திப்பில் நாங்களும் இருந்தோம். இந்த சந்திப்பின் இறுதியில், இங்கு வந்த மக்கள் மீது சில முட்டாள் அரசியல்வாதிகள் சிலர் தேவையற்ற முறையில் ஆவேசமான திணிப்புகளை திணித்தனர்.
அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் திணிப்பின் கீழ் எங்களில் சுமார் 10 வீதமானவர்கள் கோட்டாகோகம இனைத் தாக்க வேண்டும் என்ற மனநிலையுடன் காலி வீதியில் அணிவகுத்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஒரு மாதமாக இருந்தது. ஜனாதிபதியோ வேறு எவரும் இதற்குக் கல்லெறிய விரும்பவில்லை. குழுவினர் வெளியேறும் போது நான் அலரிமாளிகையில் இருந்தேன்.குழு சென்றதும் டி.ஐ.ஜி தென்னகோனிடம் பேசி ‘இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவமாக இருக்கும். தயவு செய்து இதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன்.
டி.ஐ.ஜி தென்னகோன் என்னிடம், ‘பிரச்சினை இல்லை சார், அனைத்து வீதிகளுக்கும் வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன. இதை நாங்கள் நிறுத்துவோம்’ என்றார். அந்த அழைப்பை விடுத்து ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். நான் ஜனாதிபதி மாளிகையில் இருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க என்னை அழைத்தார். ‘பெரிய பிரச்சினை வரப் போகிறது அமைச்சர், உடனடியாக ஜனாதிபதியிடம் சொல்லி இதை நிறுத்துங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது.
அப்போது நான் ஜனாதிபதியிடம், ‘பெரிய பிரச்சினை உள்ளது, இங்கு பெரும் நெருக்கடி ஏற்படப் போகிறது. உடனடியாக தலையிட்டு நிறுத்துங்கள்’ என்று கூறினேன். அப்போது பல அமைச்சர்கள் இருந்தனர். ஜனாதிபதி தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி, “இதை நிறுத்துங்கள் என்று காலையிலேயே சொன்னேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது..”
அப்போது டி.ஐ.ஜி. தென்னகோன், “சார், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் வேண்டாம், தண்ணீர் பீரங்கிகளால் தாக்க வேண்டாம் இதை நிறுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் 12.40க்கு என்னிடம் கூறினார்..”
ஜனாதிபதி, ‘நாட்டின் ஜனாதிபதி கூறுகிறேன், உடனடியாக நிறுத்தவும்..”‘ என்றார். அதன் பிறகுதான் இப்படி நின்றது.
அநுர குமார திஸாநாயக்க கூறியது உண்மை, தாக்குதலை நிறுத்தக் கூடாது என பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உத்தரவிட்டது உண்மை தான்..” எனத் தெரிவித்திருந்தார்.
- தமிழில் – ஆர்.ரிஷ்மா