(கனகராசா சரவணன்)
முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு, உறவினரின் வீடு, ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்து சோதப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எண்மரையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (13) ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை 10 ஆம்திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினாரின் வீடு ஹோட்டல், கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத்தொழிற்சாலைகளும் சேதமாக்கப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்ட விசாரணையின்போது கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் ஹோட்டலிருந்து கொள்ளையிடப்பட்ட றைஸ் குக்கர் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான 8 பேரையும் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.