கொழும்பின் சில பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு கோரி வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
கொழும்பு - ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அவ்விடத்தை கடந்துச் செல்வதற்கு முற்பட்ட வாகனங்களின் சாரதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹைலெவல் வீதியின் நாவின்ன சந்தி மற்றும் விஜேராம சந்தி ஆகிய பகுதிகள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதால் மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொழும்பு, ஆமர்வீதியில் நேற்று (07) எரிவாயு கோரி போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில், அப்பகுதிக்கு எரிவாயு சிலிண்டர்கள் லொறியின் ஊடாக இன்று (08) கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து லொறியிலிருந்த 100 சிலிண்டர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, எரிவாயுவுக்காக பல பகுதிகளில் மக்கள் நேற்றும் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், சில இடங்களில் வீதி மறியலிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர். மாலைவேளையில் கொழும்பு-02 கொம்பனித்தெருவை மறித்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது பேஸ்லைன் வீதியை மறித்து தெமட்டகொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.