அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள சுப்பர் மார்கெட் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நியூயோர்க்கின் பஃபேலோ (Buffalo ) நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை நுழைந்த ஓர் இளைஞன் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இனவாத நோக்குடன் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படடுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புhதிக்கப்பட்டவர்களில் 11 பேர் ஆபிரிக்க அமெரிக்கர்கள் என பஃபேலோ நகர பொலிஸ் ஆணையாளர் ஜோசப் கிரமக்லியா தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் கவச உடை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் துப்பாக்கிப் பிரயோகத்தை சமூக வலைத்தளம் மூலம் நேரடியாள ஒளிபரப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞன் பின்னர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இத்துப்பாக்கிப் பிரயோகம் ஒரு வன்முறைத் தீவிரவாதம் (violent extremism) என எவ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
வெறுப்புணர்வு குற்றம் (hate crime ) மற்றும் இனவாத நோக்குடைய வன்முறைத் தீவிரவாதம் ஆகிய இரு கோணங்களில் நாம் விசாரணை நடத்தி வருகிறோம் என எவ்.பிஐ அதிகாரி ஸ்டீபன் பெலோன்கியா தெரிவித்துள்ளார்.