Our Feeds


Monday, May 16, 2022

ShortNews Admin

09ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 398 பேர் அதிரடி கைது!



(எம்.மனோசித்ரா)


காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்று (16) திங்கட்கிழமை காலை 6 மணி வரை 398 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 756 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 159 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 20 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு , இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்றுவரை  398 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 101 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு , 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »