Our Feeds


Saturday, April 9, 2022

Anonymous

இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்குங்கள்: தமிழக முதல்வரிடம் TNA கோரிக்கை

 

 

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

இங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களை வழங்கத் தயாராகவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் தெரிவித்ததுடன் இப்பொருட்களை விநியோகிப்பதற்கு இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும கோரியிருந்தார்.



இது தொடர்பாக தமிழக அரசு நேற்று முன்தினம் (7) வெளியிட்ட செய்திக் குறிப்பில்  “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்ரல் 7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.



இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றுபடும் வேளையில் தமிழர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்குவது பிளவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்,  எனவே நாட்டுமக்கள் அனைவருக்கும் உதவிகளை வழங்குங்கள்” என தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலினிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »