(எம்.எப்.எம்.பஸீர்)
ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிஸார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவையும் அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாகக் கைது செய்து கேகாலை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேற்று (27), பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே.