அட்டாளைச்சேனை, தர்காடவுன் கல்விக் கல்லூரிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நோன்பு கால விடுமுறையைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கல்வி அமைச்சர் தினேஸ்குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டிலுள்ள சகல கல்விக் கல்லூரிகளினதும் தற்போதைய தவணை இம்மாதம் 8 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டு அடுத்ததவணை இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவுகக்கான பிரதம ஆணையாளர் சகல கல்விக் கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அட்டாளைச்சேனை, தர்காடவுன் ஆகிய கல்விக் கல்லூரிகள் முஸ்லிம் ஆசிரிய மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை. இவை முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணையை பின்பற்றும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
இதன்படி முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் முதலாம் திகதி முதலாம் தவணைக்காகவும், நோன்புக்காகவும் மூடப்பட்டு அடுத்த மாதம் முற்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்த நடைமுறை பிரதம ஆணையாளரின் கடிதப்படி அட்டாளைச்சேனை, டர்காவுன் கல்விக் கல்லூரிகளுக்கு இம்முறை மறுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் அனுமதியுடனே தான் இந்த அறிவித்தலை விடுப்பதாக பிரதம ஆணையாளர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விரு கல்விக் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டது முதல் முஸ்லிம் பாடசாலை தவணைகளின் அடிப்படையிலேயே செயற்பட அனுமதிக்கப்பட்டு வந்தன. இம்முறை இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமது கலாசார அடிப்படையில் செயற்பட இருந்து வந்த உரிமை இக்கல்விக் கல்லூரிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு இக்கல்விக் கல்லூரிகள் முஸ்லிம் பாடசாலை தவைணைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயற்பட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.