Our Feeds


Sunday, April 10, 2022

Anonymous

அனைத்து MPக்களும் பதவி விலகி கல்வியலாளர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமேன போராட்டக்காரர்கள் கோருகிறார்கள். அது சாத்தியமில்லை - GL பீரிஸ்

 



(நா.தனுஜா)


பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்துக்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்புக்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.


தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

தற்போது நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகள் மற்றும் மின்விநியோகத் தடை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இந்த நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மின்விநியோகம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான விளைவுகள் மக்களின் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்புப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அந்த ஆற்றாமையின் விளைவு என்றும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோரில் 80 – 85 சத வீதமானோர் அடிப்படைவாதிகளோ அல்லது அரசியல் ரீதியில் வலுவூட்டப்பட்டவர்களோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமை என்பது இலங்கையில் இயங்குநிலையில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இல்லங்களுக்கு வெளியே இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்த ஜீ.எல்.பீரிஸ், அவற்றின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக்கட்டமைப்புக்கு எதிரான கண்டனத்தையும் அதன்மீதான எதிர்ப்பையும் வெளிக்காட்டியதுடன், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகின்றார்கள் என்று இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததுடன் வெளிநாடுகள் மற்றும் சர்வதேசக் கட்டமைப்புக்களின் உதவியுடன் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமானவை அல்ல என்பதுடன் அவர்கள் அரசியலமைப்புக்கு அமைவாக வழங்கப்படக்கூடிய தீர்வுகளில் ஒன்றைக் கோருவதாகத் தெரியவில்லை. சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மின்விநியோகத்துண்டிப்பு ஆகியவற்றின்மீது காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் அவதானம் தற்போது வேறுபக்கம் திரும்பியிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் உரியவாறான கணக்காய்வு மேற்கொள்ளப்படும்வரை அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பெறுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளிலிருந்து விலகி, கல்வித்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைசார் நிபுணர்களும் நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுடன் உலகின் எந்தவொரு நாடும் அவ்வாறான வழிமுறையில் நிர்வகிக்கப்படவில்லை’ என்று ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.

மேலும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்த 60 நாட்களுக்கு அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் காலம்வரை நாட்டை நிர்வகிப்பதற்கு ஏற்ற ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யமுடியும் என்றும் பீரிஸ் எடுத்துரைத்தார். அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கத்தைப் பதவி விலக்குவதற்கான ஏனைய வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »