(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள, நீர்கொழும்பு – கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த மீண்டும் டிஎன்ஏ.பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
இதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில், கல்முனையின் சாய்ந்தமருது பகுதியில் வெடிப்பின் பின்னர் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடற்பாகங்களை மீள தோண்டி எடுத்து டிஎன்ஏ.பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
‘2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படைகளுடனனான மோதலின்போது குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே.