(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், 5 ஆம் பிரதிவாதியான கடற்படை புலனாய்வாளர் என்டன் பெர்ணான்டோ வர்ணகுலசூரிய, தனக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்துமாறு முன்வைத்த கோரிக்கையை சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த புலனாய்வாளரின் வெளிநாட்டு பயணத் தடையை நீக்க, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யொஹான் அபேவிக்ரமவும், தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்த நிலையிலேயே, நீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்தது.
இந்நிலையில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது. இந்த வழக்கு நேற்று (29) விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.