(எம்.எப்.எம்.பஸீர்)
காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக, கிரிபத்கொட – மாகொல சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது நேற்று (13) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க மாகொல சந்தியில் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொண்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணியளவில் அவ்விடத்துக்குச் சென்ற குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் பல பல்கலைக் கழக மாணவர்கள் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலிஸார், களனி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் நிலந்த பெரேராவைக் கைது செய்துள்ளனர். அவர் தலைமையில் வந்த குழுவே தாக்குதல் நடத்தியமை தெரியவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.