இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்லும் போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியுடன் கடந்த 30 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அனைத்து வருடங்களுக்குமான பாடத்திட்டங்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் ‘இஸ்லாம் மார்க்கம் மற்றும் கலாசாரம்’ கீழ் அடிப்படைவாத போதனைகள் இருப்பதாக ஜனாதிபதி செயலணியினால் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.