பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுப்பார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பரவலாக சென்றாலும் இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
‘ஜனாதிபதி கோட்டாபய தன்னை பதவியில் இருந்து நீக்கமாட்டார் .அவர் அப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை’ என்று பிரதமர் மஹிந்த நேற்று தெரிவித்த கருத்து ஜனாதிபதி கோட்டாபயவை உருகச் செய்திருக்கிறது.
அதேசமயம் முக்கியமான பிரமுகர்கள் இருவர் நேற்று ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சமரசப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.அவர்களில் ஒருவர் வெளிநாட்டு இராஜதந்திரி. ” மஹிந்தவை வெளியில் விட்டால் உங்கள் கழுத்துக்கு கத்தி வந்துவிடும்.இடைக்கால அரசு வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க சஜித் ,அனுரகுமார ஆகியோர் தயாரில்லை.அப்படிப்பார்த்தால் மீண்டும் பொதுஜன பெரமுன தான் இடைக்கால அரசிலும் இருக்கும்.அதற்கு மஹிந்தவே பதவியில் நீடிக்கலாமே” என்ற ஆலோசனை ஜனாதிபதிக்கு சொல்லப்பட்டுள்ளது.
அதனை நன்கு செவிமடுத்த ஜனாதிபதி முன்வைத்த காலை பின்வைத்திருக்கிறார்.
இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி இப்படி கூறியிருக்கிறார்…
” இப்போது அலரி மாளிகை ,ஜனாதிபதி மாளிகை அணிகள் என பிரித்து பேசப்படுகிறது.அப்படி ஆளுக்காள் பிரிந்து வேலை செய்யாதீர்கள்.நான் பிரதமரை பதவி நீக்கம் செய்யவில்லை.செய்யவும் மாட்டேன் அப்படி செய்யவேண்டிய தேவை இதுவரை எழவில்லை.எங்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் கூட்டத்தில் இருந்த ஜனாதிபதியும் பிரதமரும் அந்நியோன்னியமாக ,இருந்தார்களென சொல்லப்பட்டது.
அதேசமயம் இங்கு இன்னொரு சுவாரஷ்யமும் நடந்திருக்கிறது….
‘தற்போதைய நிலைவரம் குறித்து முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும பேச முயன்றபோது பின்வரிசை எம்.பிக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்த முயன்றனர்.அரசுக்குள் இருந்துகொண்டே சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர் என்று அந்த எம்.பிக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.ஆனால் அந்தவேளை குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த ,டலஸ் பேசும்போது இடையூறு விளைவிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளார்.
‘டலசுக்கும் எனக்கும் உள்ள உறவு நீண்டகால நட்பு.அவரை எனக்கு நன்றாக தெரியும். நட்புக்கு அப்பால் அவர் எதையும் செய்ததில்லை.அவ்வளவு உற்ற நண்பன் அவர் ” என்று பிரதமர் கூற எம்.பிக்கள் அப்படியே அடங்கிவிட்டனர்.
இந்த நிலவரத்தை பார்க்கும்போது இன்றைய தினத்தில் கொழும்பு அரசியல் நிலைமை மாறியிருக்கிறது.ஜனாதிபதி தனது கடும்போக்கில் இருந்து இறங்கியிருக்கிறார்.மறுபுறம் பிரதமரும் இடைக்கால அரசுக்கு தயாராக இருப்பவர்களை அரவணைக்கத் தொடங்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் சுயாதீன எம்.பிக்கள் ,கட்சித்தலைவர்களை நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சந்தித்து பேசவிருந்த நிலையில் ஜனாதிபதியின் மனதில் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமாயின் இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன் ,சாந்த பண்டார ஆகியோரை பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென சுதந்திரக்கட்சி இன்று காலை கூறியிருந்தது.ஆனால் அந்த முடிவை மாற்றி இதர 11 கட்சிகளுடன் சேர்ந்து நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ள சுதந்திரக்கட்சி இன்றுமாலை தீர்மானித்துள்ளது.
ஆனால் இந்த நிலைமையின் கீழ் நாளை அந்த கூட்டம் நடைபெறுமா அல்லது இன்னொரு நாளைக்கு ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.நாளை இந்த கூட்டம் சிலவேளை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால் இடைக்கால அரச ஏற்பாடென்பது புஷ்வாணமாகிவிடும்…
ஜனாதிபதி பின்வாகியது ஏன் ?
பிரதமர் பதவி நீக்க விவகாரத்தால் மொட்டுக்கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அப்படி உடைந்தால் அது இப்போதுள்ள நிலையில் தனது பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்று ஜனாதிபதி நினைத்திருப்பாரா ?
அல்லது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை நீக்கினால், பொதுஜன பெரமுன எம்.பிக்களின் ஆதரவுடன் தனது கதிரைக்கு ஆபத்தான வகையில் குற்றவியல் பிரேரணையை மஹிந்தவே முன்னின்று கொண்டுவந்துவிடுவார் என்று ஜனாதிபதி நினைத்திருப்பாரா ?
அல்லது இடைக்கால அரசு அமைக்கும் அணியின் பலம் குன்றி இருப்பதால் அல்லது அவர்களுக்கு போதிய எம்.பிக்கள் இல்லை என்று உணர்ந்து மஹிந்தவே தொடர்வது நல்லதென விரும்புகிறாரா?
தெரியவில்லை…
ஆனால் இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார ,அரசியல் நெருக்கடிகள் நீடிப்பதால் இன்றைய கூட்டத்தை சமாளிக்கவே ஜனாதிபதி அப்படி கூறினார்.அவர் அடுத்த சில தினங்களில் அதிரடி முடிவுகளை எடுப்பாரென ஆளுங்கட்சியில் சுயாதீன எம்.பி ஒருவர் சற்றுமுன்னர் தெரிவித்தார்.இடைக்கால அரசு அமைப்பதாக மாநாயக்க தேரருக்கு உறுதியளித்துள்ளதால் அவர் அதனை செய்தே தீருவார் என்று கூறுகிறார் அந்த எம்.பி
ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் அடித்த வர்த்தமானிகள் போன வேகத்தில் திரும்பி வந்தனவே.அரசாங்கத்தின் பல முடிவுகள் நிலையாக இருந்ததில்லையே…அப்படி இருக்கையில் ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானத்தை நம்புவது எவ்வாறு என்று நான் அந்த எம்.பியிடம் கேட்டேன்.
அவரிடமிருந்து பதில் இல்லை…
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தேவையான ஒப்பங்கள் எதிர்க்கட்சியிடம் இல்லை. அதனால் அவர்களை நம்பி தன்னை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய அண்ணனை பகைப்பதா?என்றே ஜனாதிபதி இன்று ,இந்த நிமிடத்தில் சிந்திப்பதாகவே எனக்குப் படுகிறது.
ஆனால் என்னதான் நடந்தாலும், இழந்த ஆதரவை மக்களிடமிருந்து மீளப்பெறுவது ராஜபக்ஸக்களுக்கு இலகுவாகிவிடாது.ரஜினி மொழியில் சொன்னால் ‘கதம் கதம்…’
ஆர். சிவராஜா
ஆசிரியர் – தமிழன் பத்திரிகை