(இராஜதுரை ஹஷான்)
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் மீது அவதானம் செலுத்த நேரிடும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பீடு தொடர்பிலான தனிநபர் பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிக்கிறார்கள்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முடியாது. மறுபுறம் ஜனாதிபதி பதவி விலகினால் அது அரசியமைப்பு ரீதியிலான நெருக்கடியினையும் ஏற்படுத்தும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து 6 மாத காலத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமானது என்பதையே வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது அவதானம் செலுத்த நேரிடும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாட்டு மக்கள் உள்ளார்கள்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம் தொடர்பிலான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வகையில் பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளேன்.
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மத்திரமல்ல உயர்மட்ட அரச அதிகாரிகளின் சொத்துக்களும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றார்.