நாட்டில் நிலவும் நிலைமை, அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை ஜனாதிபதி நடத்திய சந்திப்பு மற்றும் நிலம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில், கைதிகளின் பிரச்சினைகள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஆலோசனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.