பாரிய அரச எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அறியமுடிகிறது.
அந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒரு எல்லையுள்ளது. அந்த எல்லையை மீறி செயற்பட்டால் அதனை தடுப்பதற்கும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்துக்கு பொறுப்பு உள்ளது என தெரிவித்த அமைச்சர், ஜனநாயகத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். அதுதொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர்,
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு சேறு பூசும் வகையில் பிரசாரங்களும் அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
எனினும் முதல் தடவையாக நேற்று முன்தினமே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்பு வேலியில் தடுப்பு ஒன்றை சேதப்படுத்திய குற்றத்திற்காக எமது தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.
World Express Services
ஜனாதிபதியின் இல்லத்தின் மீது நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அரசியல் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதுதொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பது அவசியம்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதியினதும் நாட்டு மக்களினதும் உயிர்ப் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
அந்த வகையில் ஜனாதிபதியின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக உக்கிரமான ஒரு சம்பவமே.
ஜனாதிபதியையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே படையினரும் பொலிஸாரும் செயற்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இல்லத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க முற்பட்டபோது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரபாகரனின் காலத்தைப்போன்று நாட்டில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது. ஆர்ப்பாட்டங்களை எப்படியும் செய்யலாம் என்பது தவறு.
முழு நாட்டையும் வீழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் அடிப்படைவாதிகளால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை தீ வைத்து சீர்குலைத்துவிட முடியாது.
நாட்டில் மக்களுக்கு பல பிரச்சினைகளுள்ளன. அதனை நாம் இரகசியமாக வைக்க விரும்பவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு முறைமையுள்ளது.
ஜனநாயக ரீதியில் அது முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை மீறிச் செயற்பட்டால் அதற்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.