கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது, அரசுக்குள் மேலும் பிளவை ஏற்படுத்தும் என்பதாலும், சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் முயற்சி தோல்வி அடையக்கூடாது என்பதாலுமே புதிய அமைச்சரவை நியமனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.
அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் நேற்று அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவிருந்தனர்.
ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, காமினி லொக்குவே ,எஸ்.எம். சந்திரசேன உட்பட மேலும் சிலருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவிருந்தன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பொன்று இடம்பெற்றது. இறுதி முடிவு எதுவும் எட்டப்படாவிட்டாலும் பேச்சை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அமைச்சரவையை நியமித்தால் அந்த பேச்சு தடைபடும் என்ற நிலையிலேயே, அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கைக்கு புறம்பாக அமைச்சரவை நியமிக்கப்படுமானால் டலஸ் அழகப்பெரும உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்திருக்கக்கூடும். இதனை தடுப்பதும் ஒத்திவைப்பின் மற்றுமொரு நோக்கமாகும்.