மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று (29) இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நீதிகோரி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட அங்கு கற்பிக்கும் விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லடியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாம் வருட 2 மாணவர்களும் ஒரு முதலாம் ஆண்டு மாணவர் உட்பட 3 மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எந்தவிதமான விசாரணையும் இன்றி அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர்கள் செய்த குற்றத்தை மன்னித்து நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் மீது கல்வி கற்க தடைசெய்யப்பட்டதை நீக்ககோரி மாணவர்சங்க மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கையை சம்பவதினமான நேற்று காலை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் அதற்கான தீர்வினை நிர்வாகம் வழங்காத நிலையில் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறிய போது மாணவர்கள் எங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கிவிட்டு செல்லுமாறு கோரி அவர்களை செல்லவிடாது தடுத்தனர்.
இதன் போது மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் விரிவுரையாளர் ஒருவர் இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வாயில் கதவுகளை மூடி தாக்கப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் நீதி கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழக பணிப்பாளர், விரிவுரையாளர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற விடாது வாசல் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிசார் வரவழைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் பொலிசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை ஆர்ப்பாட்டகாரர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் குறித்த விரிவுரையாளர் வேண்டாம் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி வேண்டும், இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டும், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் இங்கு வரவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் நிறுவக பணிப்பாளர் மற்றும் நிர்வாக பிரிவுடன் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது மாணவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததையடுத்து இரவு 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தடுத்து வைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் வெளியேறி சென்றனர்.