தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய சம்பிரதாய அரசியல் கொள்கையிலிருந்து விடுப்பட வேண்டும்.மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலில் உணவு உட்கொள்ள நேரிடுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் சீனாவுடனான கடன் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.மேற்குலக நாடுகள் கடன் வழங்கும் போது கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கும் அல்லது கடன் நிவாரணம் வழங்கும்.எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள்,எரிவாயு பிரச்சினை தொடரும். இந்தப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
சம்பிரதாய அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் போது முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பில் என்னிடம் வினவப்பட்டது. நான் ஹிஜாப் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
முஸ்லிம் பெண்கள் குண்டுத்தாக்குதலை மேற்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் முக்கிய விடயங்களை அறிய முடிந்தது. அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது முறையற்ற விடயமாகும். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த அறிக்கைகளை ஆராயுமாறும் அவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரினார்.