Our Feeds


Saturday, April 16, 2022

ShortNews Admin

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி கூடாரங்களுக்குள் போதைப்பொருட்களை வைத்து கைது செய்ய முயற்சியாம்?




(எம்.எப்.எம்.பஸீர்)


நாளை மறுதினம் 18 ஆம் திகதியின் பின்னர், கொழும்பு – காலி முகத்திடலை அண்மித்து ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வோரை அங்கிருந்து கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.


இது தொடர்பில் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடன் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனாதிபதி செயலக பிரதான வாயிலை மறித்து கூடியிருக்கும் போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் இந்த அவதானம் திரும்பியுள்ளது.

குறிப்பாக தற்போது, கோட்டா கோ கம எனும் பெயரில், காலி முகத்திடலை அண்மித்து கூட்டாரங்கள் பல அமைக்கப்பட்டு மாதிரிக் கிராமம் ஒன்றே போராட்டக் காரர்களால் உருவாக்கப்பட்டு, எதிர்ப்பு நடவடிக்கைகள் இரவு பகலாக தொடரும் நிலையில், போராட்டக் காரர்களை அங்கிருந்து அகற்றும் அவதானம் திரும்பியுள்ளதுடன், அதற்காக கையாள முடியுமான உக்திகள் தொடர்பில் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டக் காரர்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதனை மையப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது, போராட்டக் காரர்களின் கூடாரங்களுக்குள் போதைப்பொருட்களை வைத்து அதனை மையப்படுத்தி அவர்களைக் கைது செய்வதன் ஊடாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக காட்டி ஆர்ப்பாட்டத்தை கலைப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் சமூக வளைத் தளங்களிலும் பரவலாக விடயங்கள் பகிரப்பட்டு, ஆர்ப்பாட்டத்தை கலைக்க சதி செய்யப்படுவதாக பல்வேறு தரப்புக்ளாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே (16) காலை பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் போராட்டப் பகுதியை மையப்படுத்தி நிலை கொள்ளச் செய்யப்பட்டபோதும், பின்னர் பரவலான எதிர்ப்புக்களையடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டு வேறு இடத்தில் நிலைக்கொள்ளச் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (Metro)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »