அரசாங்கத்திற்கு எதிராக இன்று இளைஞர் யுவதிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை திசை திருப்புவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்று இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை இராணுவத்தளபதிக்கு எதிரான போராட்டமாகவோ, மகாநாயக்க தேரர்களுக்கு எதிரான போராட்டமாகவோ மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை கோருகின்றனர். அதன் காரணமாகவே சுயாதீனமாக செயற்படும் எங்களது 11 கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஜனாதிபதியை சந்தித்து காபந்து அரசாங்கமொன்றை நிறுவுமாறு கேட்டுக்கொண்டோம்.
இதனையடுத்து, நாங்கள் ஜனாதிபதியிடம் சந்திப்பை மேற்கொண்டு அடுத்தநாளே சுதந்திரக்கட்சி உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு இராஜாங்க அமைச்சு பதவியை ஜனாதிபதி வழங்குகிறார். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் தருணத்தில் பின்வாசல் வழியாக வரும் ஒரு சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நினைப்பது சரியா? இதனாலேயே நேற்று இடம்பெறவிருந்த ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்தோம்- என்றார்.
மேலும், பெசில் ராஜபக்ஷ இன்னும் இந்த அரசியல் போட்டியை கைவிடவில்லை, அமைச்சர்களை விலைக்கு வாங்க நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.
ஜனாதிபதிக்கு நாங்கள் ஒன்றுதான் சொல்கிறோம். உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நியமித்த அந்த இராஜாங்க அமைச்சவை பதவி விலக்குங்கள். நாங்கள் வந்து உங்களுடன் கலந்துரையாடுகிறோம். அதை விடுத்து நீங்கள் அங்கும் இங்கும் உள்ள ஒரு சில எம்.பிக்களை கொண்டு அரசாங்கத்தை அமைத்து ஆட்சி அமைப்பீர்களானால் அதற்கான பதிலை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்- என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.