அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்களில் தலையிட மாட்டோம் எனவும், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் பாதுகாப்போம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமா் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகம் அருகே பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 9ஆம் திகதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து 9ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை அரசு பயன்படுத்தக்கூடும் என சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. மேலும், போராட்டத்தை ஒடுக்கும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு இராணுவம் பணியக் கூடாது என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, இராணுவம் சாா்பில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘அமைதியான போராட்டங்களில் இராணுவம் தலையிடாது. பொலிஸார் உதவி கோரினால் மட்டும் தலையிடுவோம். அதே வேளையில் அரசுக்கு எதிராகவும் இராணுவம் செயல்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை இராணுவம் முழுமையாகப் பாதுகாக்கும். போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வன்முறையில் ஈடுபடுவதாக வெளியான தகவலும் தவறானது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.