உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கலைத் தொடர்ந்து, அத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கறுப்புப் பட்டியலில் ( இலங்கையில் தடை செய்யப்பட்ட நபர்கள் ) 68 பேர் இணைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் மொத்தமாக 735 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக கம்பஹா, கொழும்பு, கண்டி, குருணாகல், புத்தளம் நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மேல் நீதிமன்றங்களில் 27 வழக்குகள் இதுவரை தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேக நபர்களில் 52 பேர் வெளிநாடுகளிலிருந்து, இலங்கை விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (12) இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தகவல்களை வெளிப்படுத்திய அஜித் ரோஹன,
‘ எம்மை பொறுத்தவரை இத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவியே. கடந்த 2016 ஜூன் 14 ஆம் திகதி, ஸஹ்ரானுக்கு நெளபர் மெளலவி ஒரு ‘பென் ட்ரைவை ‘ கொடுத்துள்ளார். கத்தாரிலிருந்து வந்தே அவர் இதனைச் செய்துள்ளார். அதிலிருந்த விடயங்களைப் பார்த்தே ஸஹ்ரான் அடிப்படைவாதத்தின்பால் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான நிலையில், தாக்குதலின் பின்னர் விசாரணையாளர்கள், வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 52 பேரை நாட்டுக்கு அழைத்து வந்து கைது செய்து விசாரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே இந்த 52 பேரும் அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன் இதுவரை, இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் 365 மில்லியன் ரூபா பெறுமதியான அசையும், அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 165 மில்லியன் ரூபா பணமும் அரசுடைமையககப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தில் 68 நபர்கள், தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ‘ என தெரிவித்தார்.