Our Feeds


Monday, April 11, 2022

ShortNews Admin

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்க எம்.பிக்களை மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் - மணோ கோரிக்கை.

 

மனோ கணேசன் யோசனை...

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ஆம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ஆம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்.பிக்களில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்.பிமார் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.

நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ஆம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.

நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.

ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ஆம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்.பிக்களை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை. ஆகவே அவர் வீட்டுக்கு போகும் போது, 21ஆம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்.பிக்களையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »