நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை ஆளுங்கட்சியும் கொண்டுவந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஆளுங்கட்சிக்கு தேவை கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதில்லை, நாடாளுமன்றில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்புவதேயாகும் எனவும் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இந்த போராட்டங்களை இவ்வாறே கொண்டுச்செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைகளுக்கு ஒதே தீர்வு கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதேயாகும், பொதுமக்கள் ஜனாதிபதி, பிரதமர் வீடுகளுக்கு முன்னால் சென்று அமர்ந்துகொண்டு போராட்டங்களை முன்னெடுக்குமாறும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.
மேலும், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியதாக தெரிவித்தார்கள் ஆனால் அனைவரும் நாடாளுமன்றுக்கு அரசாங்க வாகனங்களிலேயே வருகிறார்கள். உதாரணமாக வாசுதேவ நாணயக்கார முன்னர் கூறினார், அரச வாகனத்தை பயன்படுத்த போவதில்லை, சிறிய கார் ஒன்றையே பயன்படுத்துவேன் என்று ஆனால் இன்று அவரும் அரசாங்கம் வழங்கிய வாகனத்திலேயே வருகைத்தந்துள்ளார் எனவும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.