மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக நாடாளுமன்றம் இன்று கூடியபோது நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதி அருகே மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பினர் பொல்தூவ சந்தியில் வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் வீதித் தடைக்கு அருகே பிரமுகர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நீர்கொழும்பில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக துணிந்து போராடிய கம்பஹா வன இலாகா அதிகாரி தேவானி ஜயதிலக்கவும் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தார். அத்துடன், போராட்டத்தில் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, கடும் மழை பெய்த போதிலும் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்படவில்லை.
குறித்த பகுதியூடாக வீடு திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக மக்கள் காத்திருந்தனர்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் பின்புறமாக புறப்பட்டுச்சென்றதாக தகவல் வௌியானது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு பதிலளித்து நாடாளுமன்றத்தின் பின்னால் உள்ள வீதியூடாக வௌியேறினார்.
பின்புறமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வௌியேறிச் செல்வதை அறிந்துகொண்ட மக்கள் அந்த இடத்தில் கூடி எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.
இதேவேளை, இன்று பிற்பகல் இராணுவத்தினரும் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாராளுமன்றத்தின் சில அதிகாரிகளும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வௌியேறினர்.