(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை. சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கது.
அரச தலைவர்கள் பௌத்த அறகொள்கையை முறையாக பின்பற்றுவார்களாயின் நாட்டு மக்களின் கருத்துக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து முழுமையாக பதவி விலக வேண்டும் என்று ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கடந்த 8 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு மாற்று வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறது. மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகார முறையில் முடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். நாட்டு மக்கள் மதத்தையோ, இனத்தையோ முன்னிலைப்படுத்தி போராட்டத்தின் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.