தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்காததைத் தொடர்ந்து விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு ஆரம்பித்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளின் பிரச்சினையே அரசாங்கத்திற்கு எதிராக வெளிவந்த முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
மேலும், இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் அனைத்தையும் தற்போதைய அரசு மறந்துவிட்டு செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார். உதாரணமாக ஜப்பான் அரசானது இலங்கைக்கு சுமார் 70 ஆண்டுகளாக உதவி செய்து வரும் நாடு எனவும், ஆனால் தற்போதைய அரசு அந்த நாட்டை புறக்கணித்து செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும் போது, நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாதது போன்றே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு தற்போது பாரிய நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளது. எனவே இதனை கட்டியெழுப்ப வேண்டும். அதனாலேயே நாங்கள் தற்போதைய அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். சுதந்திரக் கட்சியானது இனி அரசாங்கத்துடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளாது.
தற்போது நாட்டிலுள்ள மக்கள் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நாட்டிலுள்ள சுமார் 2 இலட்சம் பேருக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் ஏனைய அனைவருக்கும் பொருளாதார பிரச்சினை இருக்கிறது. அவர்கள் நாளாந்தம் மிகவும் சிரமப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். இது எமக்கு நன்றாக தெரியும், ஆனால் அரசு தெரிந்தும் தெரியாததுபோல இருக்கிறது.
சாந்த பண்டார எம்.பி நேற்று செய்த செயலானது அவரின் அரசியல் வாழ்வை நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டது. அவர் செய்தது அரசியல் தற்கொலை. அவரின் இந்த செயல் மிகவும் வேதனையளிக்கிறது. நாட்டு மக்கள் வீட்டுக்கு போகச்சொல்லும் ஒரு அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பை வகிக்க சென்றமை மிகவும் அவமானகரமான செயல் எனவும் தெரிவித்தார்.
மேலும், சாந்த பண்டார தனக்கு அறிவித்துவிட்டே சென்றதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தாக குறிப்பிட்ட மைத்ரி, அவர் பதவி விலகுவதை தன்னிடம் கூறவில்லை எனவும், ஒருவேளை அவர் தன்னிடம் கூறியிருந்தால், அவரை அங்கு சென்றிருக்க அனுமதித்திருக்க மாட்டோன் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, தற்போது நாட்டு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தலைமைகள் சிந்திக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு நாடாளுமன்றில் இல்லையெனவும் அது மக்களிடையே இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது சுயாதீனமாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.