Our Feeds


Thursday, April 21, 2022

ShortNews Admin

‘ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’: பேராயர் மல்கம் ரஞ்சித்

 

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவத்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு பொரளை பிஷப் ஹவுஸில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றையதினம் இடம்பெற்ற ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மக்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் 2013 இல் இடம்பெற்ற ரத்துபஸ்வெல குடிநீர் போராட்ட சம்பவம் சிலாபம், அலாவத்தை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் போன்றே நேற்று இடம்பெற்ற ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் பாராபட்சமின்றி நீதியை வழங்கவேண்டும், போராட்டங்களில் அப்பாவி மக்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாமலும், ஆளணிகளுக்கு தீங்கு விளைவிக்காமலும் அமைதியான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொழும்பு காலி முகத்திடல் பகுதிகளில் இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் போராட்டத்தை நான் வரவேற்கின்றேன். அவர்கள் எந்தவொரு கட்சி சார்பாகவோ அமைப்பு சார்பாகவோ கலந்துகொள்ளவில்லை.

எனவே பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் எந்தவொரு வன்முறைகளுக்கும் ஆளாகாத வகையில் ஈடுபடுமாறு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »