Our Feeds


Saturday, April 23, 2022

ShortNews Admin

வலுக்கும் மக்கள் போராட்டம்; தடுமாறுகிறது கோட்டா அரசாங்கம் - நடப்பது என்ன?


 

றிப்தி அலி

அமெரிக்க டொலரிற்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது. இந்த வருட ஆரம்பத்தில் 202 ரூபாவாக காணப்பட்ட ஐக்கிய அமெரிக்க டொலரிற்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்று (20) புதன்கிழமை 339 ரூபாவாக காணப்பட்டது.


இவ்வாறு இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைவதன்  காரணமாக நாட்டில் பாரியளவில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக எரிபொருள், பால்மா, கேஸ், கோதுமை மா போன்ற பொருட்களின் விலைகள் ஒவ்வொரு வாரம் அசுர வேகத்தில் அதிகரிக்கின்றன. இதனால், இவற்றுடன் தொடர்புபட்ட உற்பத்திகளின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றன.

இந்த விலை அதிகரிப்பினை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு இலங்கைப் பிரஜைகள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ச்சியாக பல மணி நேர மின்வெட்டும் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டங்கள்

இதனால் அதிருப்தியடைந்த மக்கள், 69 இலட்சம் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இன, மத, மொழி என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி அனைத்து மக்களும் தற்போது வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக கடந்த மார்ச் 31ஆம் திகதி மீரிஹானையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் அமைதிப் போரட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதில் அத்துமீறி நுழைந்த சில சதிகாரர்களினால் இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் சுமார் 50க்கு மேற்பட்ட அப்பாவிகள் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கைது செய்யப்பட்டனர்.  இவர்களை விடுதலை செய்வதற்காக சுமார் 300க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தொண்டர் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில், கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அன்றிலிருந்து இன்று (21) வியாழக்கிழமை வரை தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு அதனை அண்டிய காலி முகத்திடல் பிரதேசத்தில் மக்கள் கூடாரமடித்து தங்கியுள்ளனர்.

#GotGoHome (வீட்டுக்கு போங்கள் கோட்டா) எனும் தொனிப்பொருளில் எந்தவொரு அரசியல்வாதியினதோ அல்லது அரசியல் கட்சியினதோ ஆதரவுமின்றி பொதுமக்களின் முழுப்பங்களிப்புடன் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் டிக்டொக் போன்ற சமூக ஊடகங்கள் மூலமே இப்போராட்டத்திற்கு ஆதரவு பெறுகி வருகின்றது. இதற்கு ஆதரவாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியா நடைபெற்று வருகின்றன.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் இதன்போது முற்றுகையிடப்படுகின்றன. தமிழ் - சிங்கள புதுவருட கொண்டாட்டம், முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் இப்தார், உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனை என அனைத்து சமய நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன. அது மாத்திரமல்லாமல் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் போராட்டம் அரசாங்கத்தினை கதிகலங்கச் செய்ததுடன் பல உடனடி அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வைத்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

இதன் முதற் கட்டமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இந்த உரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்புக் கிடைக்கவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்களை தம்முடன் பேச்சு நடத்த பிரதமர் அழைப்பு விடுத்தார்.

குறித்த அழைப்பினை நிராகரித்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினையும், ஆளும் அரசாங்கத்தினையும் பதவி விலகுமாறு கோரினர். இவ்வாறன நிலையில் கடந்த 4ஆம் திகதி திஙட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த முழு அமைச்சரவையும் இராஜினாமாச் செய்தது.

அது மாத்திரமல்லால் ஆளும் அரசாங்த்திற்கு ஆதரவளித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளினைச் சேர்ந்த  40 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

இதனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்பட்ட இந்த அரசாங்கம், தற்போது சாதாரன பெரும்பான்மையினை  நீரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு தேவையான கடனை பெறுவதற்காக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராக செயற்படும் அலி சப்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் தற்போது அலி சப்ரி அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்திய உதவி

இதேவேளை, இலங்கை மக்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் அரிசி போன்ற பல பொருட்களை கடன் அடிப்படையில் இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

'அயலவருக்கு முதல்' எனும் திட்டத்தின் கீழ் எதிர்காலத்திலும் பல உதவிகளை வழங்க இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல், இலங்கைக்கு உதவுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கலந்துகொண்டமை முக்கிய விடயமாகும்.  

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜீவா பாராட்டியுள்ளார்.

புதிய அமைச்சரவை

இவ்வாறன நிலையில் 19 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 27 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த திங்கட்கிழமை (19) நியமிக்கப்பட்டனர்.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய எந்தவொரு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.  இந்த அமைச்சரவை மூத்த மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கலப்பு அமைச்சரவை என அறிவிக்கப்பட்டது.

இதில் ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, டக்ளலஸ் தேவானந்த, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி ஆகியோரைத் தவிரிந்த ஏனைய அனைவரும்  அமைச்சரவைக்கு புதுமுகங்களாகும்.

எனினும், புதிய அமைச்சரவை மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக இளம் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை என்று கூறப்படினும், இதில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் 45 வயதினை தாண்டியவர்கள் என்றும், விடயத்திற்கு பொருத்தமான நபர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை எனவும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி போன்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சாந்த பண்டார, சுரேன் ராகவன் மற்றும் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின்   கயஷான் நவனந்த ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கி இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

இரண்டு தவறுகள்

அமைச்சரவை நியமன நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தான் இரண்டு தவறுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். "இரண்டு தவறுகள் நடந்துள்ளன. இலங்கை முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருக்க வேண்டும், சேதனப் பசளை முறையை கொண்டு வரும் முயற்சியில் விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது" என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிடிவாதம் குணமே இன்றைய பிரச்சினைக்கு மூல காரணம் எனலாம்.  தான் எடுத்த தீர்மானத்தினால் நாட்டுக்கு எவ்வளவு தீமை வந்தாலும் அதனை மாற்றிக் கொள்ள அவர் இலகுவில் இணங்குதில்லை. கொவிட் சடலங்கள் கட்டாய தகனம் மற்றும் இரசாயன உரத்திற்கான தடை போன்றவற்றினை குறிப்பிட முடியும்.

அரசியலமைப்பில் திருத்தம்

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமச் செய்யுமாறு ஜனாதிபதி கோரியுள்ளதுடன் அதற்கு பதிலாக ரமேஷ் பத்திரனவினை நியமிக்க சிபாரிசு செய்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் ஆத்திரமடைந்த பிரதமர், "இவ்வாறு நடந்தால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயங்கமாட்டேன்" எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமன நிகழ்வினையும் பிரதமர் புறக்கணித்திருந்தார்.

அத்துடன், "அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாமலாக்கி 19ஐப் போன்று பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தினை வழங்கும் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது" என கடந்த செவ்வாய்க்கிழமை (19) பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ரம்புக்கன சம்பவம்

புதிய மின்வலு மற்றும் சக்தி அமைச்சராக காஞ்சன ஜயசேகர நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலி, ரம்புக்கன, திகன மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட நாட்டின் பல பிரதேங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ரம்புக்கனையில் ரயில் பாதையை சுமார் 15 மணித்தியாலத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்திருந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் ரம்புக்கனை போராட்டம் வன்முறையாக மாறியது.

அங்கு வந்த வெளிப் பிரதேசத்தினைச் சேர்ந்த குழுவொன்றே வன்முறைகளில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இதன்போது, பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை மற்றும் துப்பாகிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கண்டத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த அரசாங்கத்தினை தர்மசங்கட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும் மக்களின் போராட்டங்களை ஒரு போதும் பலப் பிரயோகம் மூலம் அடக்கமாட்டோம் என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, காலி முகத்திடல் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மக்களினால் முன்னெடுக்கப்படும் அமைதிப் போரட்டங்களில் குழப்பம் விளைவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவொன்று களமிறங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.  

குறிப்பாக இராணுவத்திலுள்ள ஒரு குழுவொன்று இதற்கென விசேடமாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இராணுவ ஊடகப் பிரிவு இதனை மறுத்துள்ளது.

முஸ்லிம் எம்.பிக்களுக்கு பதவி

முஸ்லிம் விரோத பிரச்சாரத்தின் ஊடாக அதிகாரத்திற்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிர்ணயிப்பதற்காக முஸ்லிம் எம்.பிக்களின் தயவினை நாடியுள்ளது.

எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த ஏழு முஸ்லிம் எம்.பிக்களில் நால்வர் தற்போது ஆதரவினை வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் எஸ்.எம்.எம். முஷாரபிற்கு இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ள கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி  அறிவித்த நிலையிலேயே இவர் தற்போது இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் அமைச்சு பதவியினை பொறுப்பேற்றமை முஸ்லிம் சமூகத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நசீர் அஹமதின் சொந்த ஊரான ஏறாவூரில் அவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

மு.காவின் நிலைப்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் நசீர் அஹமட் தவிர்ந்த ஏனைய மூவரும் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.

இதேவேளை, "நசீர் அஹமட் அமைச்சுப் பதவியினை பெற்று அவமானச் சின்னமாக மாறியுள்ளார்" என அக்கட்சியின் தலைவரான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் முக்கிய தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக கட்சியின் அதியுயபீட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை (22) நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சி எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் முழு நாடும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »