தங்களது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாக மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டு மாதத்தை எட்டியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை படிப்படியாகத் தாக்கி அழித்து வருகிறது ரஷ்யா.
மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை ஏறக்குறைய முழுவதுமாக ரஷ்யப்படை கைப்பற்றியுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய எஃகு ஆலையைக் கைப்பற்ற போராடி வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கொடுத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று ரஷ்யா ஒருமுறை எச்சரிக்கை விடுத்தும் சரணடைய மாட்டோம் என்றும் தங்களால் முடிந்தவரை போராடுவோம் என்றும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர்.
மரியுபோல் எஃகு ஆலைக்கு அடியில் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் இல்லையெனில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மீண்டும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தங்களுடைய கடைசி நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாக உக்ரைன் வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, மரியுபோலில் சிக்கியுள்ள மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்க அனுமதிக்க வேண்டும் என ரஷ்யாவுக்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.