ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை செய்கின்றமை தெளிவாகியுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற தலையீடு ஒன்றுக்கு பொலிஸார் முயற்சிக்கும் நிலையில், அந்நீதிமன்ற நடவடிக்கைகளை கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்காது, அவ்வதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அளித்து உத்தரவிடுமாறு பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
மக்களுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு இந்த கோரிக்கையை கடிதம் ஊடாக பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளது.
குறித்த காலி முகத்திடம் பகுதி, கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லையாக இருப்பினும், கோட்டை நீதிவானாக செயற்படும் திலின கமகே, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் தலைமைகளுடன் மிக நெருக்கமாக செயற்படுபவர் எனவும் அவ்வாறான ஒருவர் முன்னிலையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பிலான உத்தரவுகளை பொலிஸார் பெற முயற்சிக்கும்போது நியாயமாக அவர் நடந்து கொள்வார் என நம்பமுடியாது என சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.