(எம்.எப்.எம்.பஸீர்)
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றனவா, அதன் தற்போதைய நிலைமை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,
‘முன்னாள் ஜனாதிபதி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே சிஐடியினர் அவரிடம் வாக்குமூலம் ஒன்றையும் பதிந்துள்ளனர். எனினும் தற்போது, தாக்குதலை தடுக்காமை தொடர்பில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவை குறித்த விசாரணைகள் நிலுவையில் உள்ளன. எனவே அந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானம் சிரேஷ்டமானது. அதனை அடிப்படையாக கொண்டு சிஐடியினர் முன்னாள் ஜனாதிபதி விடயத்தில் மேலதிக நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பர். ‘ என தெரிவித்தார்.