அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் 20 திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அமெரிக்க தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.