(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில், தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இருக்கவில்லை என்பதை சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மறைமுகமாக வலியுறுத்தி கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவன விசாரணை அறிக்கை, லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றில் அந்நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்களம் நெளபர் மெளலவி, ரிஸ்கான், மில்ஹான் ஆகிய மூன்று இலங்கையர்களுக்கு எதிராக (உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர்) தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணத்தை முன்னிறுத்தினார். இந்த தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவியே என அஜித் ரோஹண வலியுறுத்தினார்.