சட்டவிரோதமான உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் பல தடவைகள் சிந்திக்குமாறு ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமது உத்தரவு மற்றும் கட்டளைகளின் கீழ் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் படையினரை வழிநடத்திய பாதுகாப்பு செயலாளரும் இராணுவத்தளபதியும் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அமைதியான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, ஊழல் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்படும் சட்டவிரோதமான உத்தரவுகள் தொடர்பில் பல தடவைகள் சிந்தித்து செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் வினைத்திறனற்ற ஆட்சியின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்வதற்கான நெருக்கடியினால் எழுந்துள்ள சாதாரண சிவில் சமூகத்தின் மீதான அழுத்தம், அமைதியான மற்றும் வன்முறையற்ற மக்கள் போராட்டமாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை ஒடுக்குவதற்கு ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், மிகவும் வெறுக்கத்தக்க, உலகில் அதிருப்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமக்கு கீழ் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட போர் வீரர்கள், சர்வதேசத்தின் மத்தியில் அபகீர்த்திக்கும் அதிருப்திக்கும் உள்ளாவதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, ஊழல் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்படும் மக்களுக்கு எதிரான சட்டவிரோத கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பதாக நூறாயிரம் தடவைகள் சிந்திக்குமாறு ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியை வலியுறுத்தியுள்ளார்.