அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்றைய தினம் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன.
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவரான மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணுவை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அம்பாறை நீதவானின் கண்காணிப்பில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகவுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிற்கு மத்தியில், 2019 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலியானதாக கூறப்பட்டபோதிலும் 16 பேரின் உடற்பாகங்களே மீட்கப்பட்டன.
சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன், இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், உண்மையிலேயே அவர் குறித்த தாக்குதலில் உயிரிழந்தாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ, 2 சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில், 16 பேரே மரணித்திருந்தாக தெரியவந்ததென குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்த இடத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணு குறித்த இடத்தில் கண்டறியப்படவில்லை
எனினும், அவர் அந்த இடத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.