றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய எரிபொருள் பவுசரின் சாரதியும் உதவியாளரும் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு குழுவினர் வந்து பவுசரை முன்னோக்கி செலுத்துமாறு வற்புறுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பவுசரின் உதவியாளர்,
“எரிபொருள் ஏற்றிக்கொண்டு காலை 10.30 மணிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து கிளம்பினோம்.12.30 அல்லது 1 மணிக்கு கூட்டுறவு சங்கத்திற்கு முன்னால் உள்ள றம்புக்கணை பெட்ரோல் பங்கிற்கு சென்றோம். அப்போது எங்களுக்கு முன்னால் சென்ற பவுசர் வெகு தொலைவில் இருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் நாங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சிலர் வந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.
"எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எங்களுக்கு உணவளிக்கப்பட்டது, குடிநீர் கொடுத்தார்கள். இரண்டு பவுசர்களையும் அகற்ற பொலிசார் கடுமையாக முயன்றனர். இயலாத பட்சத்தில் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்."
பவுசர் சாரதி,
"நான் ஓட்டுநர் இருக்கையில் இருந்தபோது நான்கு சக்கரங்களிலும் மக்கள் காற்றைத் திறந்தனர், பவுசரை முன்னால் எடுக்கமாறு பொலிஸார் என்னிடம் தெரிவித்த போதும் என்னால் பவுசரை முன்னால் எடுக்க முடியவில்லை."
ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் இரண்டு எரிபொருள் பவுசர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் போது எரிபொருள் பவுசருக்கு ஒருவர் தீ வைக்க முயற்சிப்பதைக் காட்டும் காணொளியும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
எனினும் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை கட்டுப்படுத்த முற்பட்ட போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினர் நாளை (22) அப்பகுதிக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.
போராட்டத்தின் போது 20 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..