ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘B’ அறிக்கையை மாற்றியமைத்ததாக ரம்புக்கனை பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸார் சம்பவம் தொடர்பான உண்மைகளை ‘AR’ அறிக்கை மூலம் சமர்ப்பித்திருந்த போதிலும், ‘B’ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
‘B’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், நேற்றிரவு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, டிபெக்ஸைப் பயன்படுத்தி அறிக்கையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நீதவான் அவதானித்தார்.
போராட்டக்காரர்கள் சார்பில் முன்னிலையான பல சட்டத்தரணிகளும் ‘B’ அறிக்கையின் மாற்றங்களை குறிப்பிட்டு நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அறிக்கையை மாற்றியமைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் கேகாலை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.