( எம்.எப்.எம்.பஸீர்)
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவின் தலைமையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
‘இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற தாக்குதலை எம்மால் மறக்க முடியாது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும்போது, தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இந்த பேரழிவுக்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது. சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தெளிவாகிறது. அந்த சதித் திட்டக்காரர்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரம் போதுமானதல்ல, அரசாங்கத்தை சரியாக நிர்வகித்து அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்தாது, முஸ்லிம் மக்கள்மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என நீர்கொழும்பு – கிரீன்ஸ் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
எனினும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, ‘ சிங்கள பெளத்தர் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்க 8 முஸ்லிம்கள் தமது உயிரை துறப்பார்களா? ‘ என கேள்வி எழுப்பியதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணம், அதற்காக தேவாலயங்கள், ஹோட்டல்கள் ஏன் தெரிவு செய்யப்பட்டன என்பதற்கு, பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தாக்குதலுக்கு முன்னர் வெளியிட்ட ஒளிப்பதிவின் செம்மைப்படுத்தப்பட்ட இறுவெட்டு ஒன்றை முன்வைத்து பதிலளித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணை விரைவுபடுத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 170 பேர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர்களில் 45 பேர் விளக்கமறியலில் உள்ளதாகவும், 13 பேரிடம் தடுப்புக் காவலில் விசாரணை நடப்பதாகவும், 30 பேர் பிணையில் உள்ள நிலையில் 6 பேருக்கு குற்றப் பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.