Our Feeds


Thursday, April 28, 2022

ShortNews Admin

பயங்கரவாதி ஸஹ்ரானின் சமயல்காரர் என கூறி கைது செய்யப்பட்டவருக்கு 3 ஆண்டுகளின் பின் பிணை..

 


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தொடர்ந்து, அத்தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி, ஸஹ்ரான் ஹாஷிமின் சமயற்காரர் என பொலிஸ் தரப்பால் அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அசனார் மொஹம்மது ரமீஸ் எனும் நபரை சுமார் 3 ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் பி.என்.எல். மஹவத்த இதற்கான உத்தரவைப் நேற்று முன்தினம் (26) பிறப்பித்தார். சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையில், சந்தேக நபரான அசனார் மொஹம்மது ரமீஸ் சார்பில் அவரது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.. சுஹைர் விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தார்.



பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரமீஸ், ஸஹ்ரான் திருமணம் முடித்திருந்த ஊரான, குருணாகல்- கட்டுபொத்த, கெக்குனுகொல்ல – மடலஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் அங்கு பரவலாக பலராலும் அறியப்படும் சமயற்காரர் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் சுட்டிக்காட்டியிருந்தார். பயங்கரவாத செயற்பாடுகள் எதிலும் ஈடுபடாத அவர் அநியாயமாக 3 ஆண்டுகள் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலின் கீழும் விளக்கமறியலிலும் உள்ளதாகவும் அவர் ஆலோசனை சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணங்கள், விழாக்கள் மற்றும் உள்ளூர் வெளியூர்களுக்குச் செல்லும் குழுக்களுக்கு உணவு சமைப்பதற்காக ரமீஸ் அடிக்கடி பதிவு செய்யப்படுவதாகவும், ஸஹ்ரான் ஹாஷிம் சார்பாகவும், மூன்று பயணங்களில் அவர் உணவு சமைப்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டணம் பெற்று அவர் அப்போது சமயல் வேலையை செய்து கொடுத்துள்ளதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனைக் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஸஹ்ரான் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில், ரமீஸ் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் செய்திகள் ஊடாகவே அறிந்து கொண்டுள்ளதாகவும், அவர் குறித்த தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயங்கள் ஆலோசனை சபையினால் சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், சட்ட மா அதிபரின் ஒப்புதலுடன், இது குறித்த வழக்கு நேற்று முன் தினம், விசாரணைக்கு வந்தபோது சந்தேக நபருக்கு பிணையளித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபருக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »