Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews Admin

சாய்ந்தமருது மூதாட்டி கொலை - 3 மாதத்தின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்



சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதி புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த சுலைமான் செய்யது புஹாரி (வயது - 83) என்ற மூதாட்டி கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட மூதாட்டி வசம் இருந்த தங்க ஆபரணங்கள் கொலையாளியினால் அபகரிக்கப்பட்டிருந்ததுடன் கொலை சந்தேக நபர் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை (02) மாலை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் புலனாய்வு உத்தியோகத்தரின் தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி வாழ்ந்த கொலைச்சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்காக தற்காலிகமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர் 48 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கல்முனை பகுதியினை வசிப்பிடமாக கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த கொலை சம்பவம் மூதாட்டியிடம் இருந்த நகைகளை அபகரிக்கும் நோக்கில் நடந்திருக்கலாம் என அடிப்படை விசாரணைகளில் இருந்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »