பிரதி சபாநாயகர் தெரிவின் போது, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய தீர்மானத்துக்கு அமைவாகவே வாக்களிக்கப் போவதாக, அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தெரிவின் போது, எதிர்க் கட்சி பிரேரிக்கும் நபருக்கே மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாதோருக்கு எதிராக, கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில், எம்.எஸ். தௌபீக் மேற்படி முடிவை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடந்த தினமன்று, அந்தத் திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் வாசகம் கொண்ட பட்டியை தனது கையில் எம்.எஸ். தௌபீக் கட்டிக் கொண்டிருந்தவாறே, அந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை நினைவுகொள்ளத்தக்கது.
பின்னர் கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எதிராக வாக்களித்த போதும், எம்.எஸ். தௌபீக் உள்ளிட்ட அந்தக் கட்சியின் எம்.பிகள், ஆதரவாக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தௌபீக் நீக்கப்பட்டதாக கட்சி அறிவித்தது.